வியாழன், 4 ஜனவரி, 2024

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.75 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!


சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை இந்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அப்பிரிவு போலீஸார் கூறியதாவது: சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கும்பல் ஒன்று கடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக அப்பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.280 கோடி மதிப்பிலான 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை அண்மையில் பறிமுதல் செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21ஆம் திகதி தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் 4.8 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மணிப்பூரில் உள்ள மோரே என்ற இடத்தில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை மண்டல இயக்குநர் தலைமையில், சென்னை மற்றும் பெங்களூரு மண்டல அதிகாரிகளை கொண்ட தனிப்படை போலீஸார் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 28ஆம் திகதி இம்பாலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் அதே மாநிலம் மோரே என்ற பகுதியிலிருந்து வந்த காரை மறித்து சோதித்தபோது அதில் 11 கிலோ மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் காரிலிருந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், இம்பாலில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல அதிகாரிகளின் உதவியுடன் மேலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் (உரிய ஆவணம் இல்லாத பணம்) பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மேற்கொள்ள இருந்த ரூ.78.66 லட்சம் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுத்து நிறுத்தப்பட்டது. மியான்மரில் உள்ள தமு என்ற இடத்தில் இருந்து இந்த கடத்தல் பொருள் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவை தேநீர் (டீ தூள்) பாக்கெட்டுகளில் மறைத்து மோரேக்கு கொண்டு வரப்பட்டன. மோரேயில் இருந்து, இம்பால்- கவுகாத்தி – சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றது தடுக்கப்பட்டது. மொத்தம் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன் (தோராய மதிப்பு சுமார் ரூ.75 கோடி) பறிமுதல் செய்யப்பட்டதோடு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.