சனி, 2 டிசம்பர், 2023

யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணரால் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற இளம் பெண் கொல்லப்பட்டாரா? சுரேக்கா கூறுவது என்ன?

 


சட்டம் பயிலும் மாணவியான சுரேக்கா என்பவரின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இன்னுமொரு அசமந்தப்போக்கு ♦

இரட்டைப்பெண் சிசுக்களைப்பெற்று ஐந்து நாட்கள் கூட முடிவடையாத 25 வயதே ஆன, இளம் தாயை ; வீட்டிலே பராமரிக்குமாறு அனுப்பும் அளவிற்கு , தொற்றுநோய் தடுப்பு முகாமைத்துவம் கூட முறையாக இல்லாத ஒரு வைத்தியசாலை தானா இந்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை ?????

27.11.2023 திங்கட்கிழமை அலுலகத்திலிருந்து வீட்டுக்குப்போகின்றேன் . பேருந்திலிருந்து இறங்கும் போதே, அந்தத்துயரமான செய்தி என் காதை வந்தடைந்தது .

ஒற்றைப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கவே எத்தனை போராட்டம் செய்ய வேண்டிய இந்த மண் மீது இரட்டைப்பெண்குழந்தைகள் , பிறந்து , எட்டாவது நாளிலேயே அம்மாவைப் பிரிந்து எங்ஙனம் வளரப்போகின்றது என்ற ஏக்கம் , ஏனோ தூங்கப்போகவே முடியாமல் மனதைக்குடைந்தெடுத்தது .

நான் , நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் , மாதாந்தம் நடைபெறும் , கலந்துரையாடல்களில் , பெற்றுக்கொண்ட அறிவு , அனுபவங்களின் படி, பிரசவத்தின் 42 நாட்களுக்கிடையில் தாயோ , சேயோ மரணம் என்றால் இலங்கையின் தாய்சேய் மரண வீதத்தில் அது எத்தகைய தாக்கத்தைச்செலுத்தும் அளவு பாரதூரமானது என்பதும் , பராமரிப்பு சேவைகள் குறித்தான பல கேள்விகளும் நினைவிற்கு வந்தது . அநியாயமான கொலை என்றே

மனம் அழுதது .

2023. 11. 21 அன்று மாலை வயித்துக்குத்து , என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குச்

சென்றதாகவும் , அந்த வைத்தியசாலைக்கு முன்னெதிரேயுள்ள தனியார் கிளினிக் இல் , பிரசவம் தொடர்பான ஆலோசனைகள் , சிகிச்சைகள் , பரிசோதனைகளைச்செய்த ,

பெண் நோயியல் நிபுணர் சிறிதரன் டொக்டரால் , அறிவுறுத்தப்பட்டமைக்கிணங்க , போதனா வைத்தியசாலையின், அவரது , அலகு 20 இல் , அந்த நாளே சிசேரியன் மூலம் இரண்டு பெண்குழந்தைகளைப்பெற்றெடுத்துக்கொண்டதாகவும் அறிந்துகொண்டேன் .

சனிக்கிழமை காலையிலேயே ,

” அம்மா அம்மை நோய்க்குரிய அடையாளங்கள் தென்படுவதாகவும் , தனியார் மருந்துக்கடைகளில் மருந்து வாங்குமாறு எழுதிக்கொடுத்து விட்டு , இது இங்குள்ளவர்களுக்கும் தொற்றிவிடும் , கெதியா வீட்டுக்குப் போங்கோ , அங்கே தான் இதனைப் பராமரிக்க வேண்டும் என்று சொன்னதாக விதுஷாவின் அம்மா சொல்லியழுதார் .

பிள்ளைக்கு பிறசர் நிற்பதாக சொல்லி சோதித்தவர்கள் , தொற்றுநோயைக்காரணம் காட்டி துரிதப்படுத்தி , சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டுக்குச்செல்ல பணித்தார்கள் .

பாரம்பரிய முறைகளில் , பிள்ளையைப்பராமரிக்கலாம் என்று நம்பிய போதும் , வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் , பிள்ளைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் அற்றவள் போல உடல் இயலாத நிலையில் பாலூட்டவோ பிள்ளைகளை பூரிப்போடு அரவணைக்கவோ இயலாத அளவிற்கு , உடல் பலவீனமாக இருக்க , மீள வைத்தியசாலைக்குக்கொண்டு போவதைத் தவிர வழியேதும் தெரியவில்லை . என்றார் .

ஞாயிற்றுக்கிழமை காலை , தொண்டைமானாறு பிரிவுக்கு பொறுப்பான குடும்பநல மாது இன்பரூபி மிஸ் இற்கு , தொலைபேசி அழைப்பை எடுத்து வீட்டிற்கு வந்த விடயத்தைக்கூறிய போதும், நோயின் தன்மை பற்றிக்குறிப்பிட முடியவில்லை . அவராவது ஏதும் அறிவுறுத்தியிருப்பார் என விதுஷாவின் தங்கை அழுததுடன் ; , பத்து மாதம் காத்திருந்து , அதிலும் இரட்டைப்பெண் குழந்தைகள் என அறிந்ததும் , அந்தக்குழந்தைகளை ” எப்படி எப்படியெல்லாம் ”வளர்த்து ஆளாக்குவேன் என கனவு கண்டு , பிள்ளைகளின் துடிப்பைக்கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் , அதைக்கொண்டாடி மகிழ்ந்தாள் , கடைசியில் “பிள்ளைகள் கவனம் ” என்ற ஒரு சொல்லோடு இப்படி ஆகிட்டாளே என புலம்பிக்கொண்டிருந்தாள் .

விதுஷாவின் கணவர் ,

” தனியார் வைத்தியசாலையில் , முதல் நான்கு மாதங்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் , ஆறு மாதத்திற்குப்பிறகு ஒவ்வொரு மாதமும் , இறுதி இரண்டு மாதமும் கிழமைக்கு ஒரு தடவையும் சிறிதரன் வைத்தியரிடம் பணம் செலுத்தி பராமரிப்புச்செய்த எனக்கு, எப்படித்தெரியும் யாழ் போதனா வைத்தியசாலை நிலைமை .

அப்பவும் கேட்கிறேன்

” டொக்டர் , இரட்டைக்குழந்தைகள் , உங்களை நம்பித்தான் நம்பிக்கையை வைத்திருக்கின்றோம் , நீங்கள் தானே அந்த சீசர் செய்வீர்கள் , எனக்கேட்ட போது

“நீங்கள் போகும் நேரம் யார் நிற்பார்களோ , அவர்கள் தான் அதைச்செய்வார்கள் ” என்ற போதே எனக்குத்தெரியும் . அவர் அதைச் செய்யமாட்டார்” என்று அழுதார் .

என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் , வைத்தியசாலைக்குள் இருந்த கட்டில்களுக்கு அதிகமாக , அங்கும் இங்குமாக இருந்த கர்ப்பிணிப்பெண்களையும் , குழந்தைகள் பெற்றெடுத்தவர்களையும் பார்க்கவே பயமாகத்தான் இருந்தது .

சிசேரியன் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தாயை , எப்படித்தான் ஈவிரக்கம் இல்லாமல் , துண்டு வெட்டி வீட்டுக்கு அனுப்பினார்களோ தெரியவில்லை , இந்த இரண்டு பச்சை மண்களுக்கும் இந்த நிலைமை வரும் என்று எனக்குத்தெரியாது என புலம்பினார் .

திரும்பவும் தன்னை தொற்றுநோய் எனக்குறிப்பிட்டு , பாரபட்சப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிய வைத்தியசாலைக்குத் தானோ, அழைத்துச்செல்லப்போகின்றீர்கள் ? எனப்பரிதாபமாகக்கேட்டதால் தானே , தனியார் வைத்தியசாலைக்கு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை , என பருத்தித்துறை றூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றேன்.

அங்கேயும் , மருந்து தந்ததுடன் , பி.ப 3 .மணிபோல

விசேட வைத்தியர் வருவார் , வாருங்கள் என அனுப்பினார்கள் .

மூன்று மணிக்கு திரும்ப அங்கு சென்ற போது தான் அந்த வைத்தியர் சொன்னார் ; நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு உடனே செல்லுங்கள் .என,

எப்படியோ தங்கியிருந்தே சிகிச்சை பெற வேண்டும் என சொல்லப்பட்டதால் , வீட்டிற்கு வந்து வைத்தியசாலையில் தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் ஆதார வைத்தியசாலைக்கு 5 மணியளவில் சென்றிருந்தோம் .

சிறுநீரைச் சோதனை செய்து வருமாறு , தனியார் ஆய்வுகூடத்திற்கு அனுப்பினார்கள் . சோதனைகளைச்செய்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன் .

இரவு 12 மணியிருக்கும் . அம்புலன்ஸ் இல் , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள் . ஒரு வைத்தியர் அந்த வோட் ல , இருந்தார் . அவர் யார் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர ,ஞாயிற்றுக்கிழமை இரவு கழிந்து , திங்கட்கிழமை 9 .மணிக்கே சிகிச்சைகள் ஆரம்பித்திருந்தன .

9. மணியளவில் , விதுஷாவுடன் , நின்ற சகோதரி கார்த்திகாவிடம் , சிறுநீரகம் எல்லாம் கிருமித்தொற்று , உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என்றார்கள் .

பின்னர் என்னை அழைத்து , காசு செலவாகும் என்றார்கள் , பணம் எவ்வளவானாலும் பரவாயில்லை ,எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள் என , சொன்னேன் . அங்கிருந்து நொதேண் வைத்தியசாலைக்கு சிறுநீரைச் சோதனை செய்வதற்காக அனுப்பினார்கள் . விழுந்தடித்துச்செல்கின்றேன் .

ஒரு மணித்தியாலத்திற்குப்

பின்னர் , நீங்கள் கொண்டு வந்த சிறுநீர் சோதனை ரியூப் மூலம் இங்கு ரெஸ்ட் செய்யமுடியாது . என்றார்கள் . யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு , அழைப்பெடுத்து தொலைபேசியில் என்ன செய்வதெனக் கேட்டேன். அவர்களும் சம்மதிக்க

முன்னுக்கு விற்கின்ற

ரியூப் ஒன்றை வாங்கிக்கொண்டு போய் சிறுநீரை எடுத்து வர , விரைந்து மூச்சிரைக்கச்சென்றேன்

என்னைப்பார்த்து , தம்பி அவசரமில்லை ஆறுதலாக நிதானமாக வாருங்கள் என்றார்கள் , அப்போதே நான் புரிந்திருக்க வேண்டும் .

திரும்பி வந்த போது , சிசேரியன் உடம்பு எப்படி வலித்திருக்கும் , கவிண்டு படுக்க வைத்திருந்தனர் . பார்த்துக்கொண்டிருக்க முடியாத நான் வெளியில் காத்துக்கொண்டிருக்கின்றேன் .

4.45 மணியளவில் , காப்பாற்ற முடியவில்லை என சிம்பிளாக கையை விரித்தனர் . அழுத குரலில் ஆஸ்பத்திரியே குழம்பிப்போக நான் வெளியே வந்துவிட்டேன் , என சொன்னார்.

இரட்டைக்குழந்தைகளை , இரவு கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒருபுறம் விதுஷாவைக்காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறம் , வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இது தொடர்பில் முறையிட வேண்டும் , என கொந்தளித்துக்கொண்டிருந்த

போது , பணிப்பாளரை நன்கு தெரிந்தவரும் , விதுஷாவின் கணவனது அத்தான் , பணிப்பாளரிடம் முறையிட , பணிப்பாளர் சத்தியமூர்த்தி டொக்டர் , குழந்தைகளை வைத்திருந்த , அலகு 20 இற்குள் வந்திருந்ததாகவும் , அண்ணன் முறையான றொசான் , சகோதரி வினோபா மற்றும் கணவரது தந்தை ஆகியோர் , நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் , கூற

” நாளைக்கு காலை நீங்கள் வாருங்கள் , விசாரணை அறிக்கை வந்ததும் மேலதிகமாகப்பேசலாம் , பிரசவம் தொடர்பில் 48 நாட்களுக்கிடையில் ஏற்படும் மரணத்தை மறைக்கமுடியாது , குழம்ப வேண்டாம் ” என நம்பிக்கை கொடுத்து சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார் .

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்தியமூர்த்தி வைத்தியரது , மன எண்ணத்தை நம்பியவாறு , விசாரணை அறிக்கைகள் பக்கமும் , நீதி மீதும் பாரத்தைப்போட்டுவிட்டு வந்ததாக சொன்னார்கள் .

பார்த்துக்கொண்டிருந்த ஒற்றை நாளில் எப்படியடி நுரையீரல் , சிறுநீரகம் அப்படி பாதிக்கும் , எந்த நோய் நொடியென்றும் ஆஸ்பத்திரிக்கு போகாதவள் , என்று வினோபா அழுதாள் .

சரி , சரி , அறிக்கை எல்லாவற்றையும் சொல்லும் ,நீ அழாதே எனத்தேற்றியதுடன் , காலையில் , அவர்களோடு வைத்தியசாலைக்குப்போகின்றேன் .

அங்கு வந்திருந்த மரணவிசாரணை அதிகாரியும் வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரியும் , நடந்து கொண்ட விதமும் , அணுகுமுறையும் தான் , அரசின் கருவிகள் தானே இவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பையே பயமுறுத்தும் அளவிற்கு இவர்கள் ஏன் செயற்படவிழைகின்றார்கள் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது .

அரச வாகனங்களும் , இலவச சேவைகளும் மக்கள் வரிப்பணங்களில் தங்குதடையின்றி சுற்றித்திரிகின்ற போதும் ,

ஓட்டோவோ வாகனமோ, சரி செய்து அவர்களை ஏற்றிக்கொண்டு வந்து, எங்களுடைய வேலைகள் முடிந்த பின் பக்குவமாக அனுப்ப வேண்டிய அநாமதேயச்செலவும் அங்கு நிலவுவதையும் கவனித்திருந்தேன் .

மரணத்தை விசாரிக்க வந்தவர் , மரண விசாரணை அதிகாரி சிவராஜா , வாக்குமூலங்களைத்துருவித் துருவிக் கேட்பார் . எங்களுடைய நியாயமான சந்தேகங்களும் , மரணத்திற்கான காரணமும் இன்னும் சில நேரங்களில் தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பை அவரது முதலாவது கேள்வியே உடைத்துப்போட்டது .

குழந்தைகளைப்பெற்றெடுத்த மனைவியின் பரிதாபச்சாவை நினைத்து ஆறுவதா ; இரண்டு பெண் குழந்தைகள் தாய்ப்பால் இல்லை , தாயின் அரவணைப்பு இல்லை எங்ஙனம் ஒற்றைத்தகப்பனாய் வளர்த்தெடுக்கப்போகின்றேன் என்று , அழுத முகமாயும் , பொறுப்பு நிறைந்த தகப்பனாயும் நின்று கொண்டிருந்த அவளது கணவனைப் பார்த்து

“உங்களுக்கு இறப்புச்சான்றிதழ் தேவையா ?” என்று இழுத்தார் .

என்ன ஐயா , கேட்கிறீங்க , உங்களை எதற்கு அழைத்துவந்திருக்கின்றோம் ;

தேவைப்படாத கேள்விகளையா கேட்கப்போறீங்கள் ; என்று கேட்டேன் . எனது முகம் பார்க்க அவருக்கு விருப்பம் இருக்க வில்லை என்பது தெரிந்தது .

” இல்லை, ஒரு வேளை இரண்டாவது திருமணம் செய்வதென்றால், காரணம் தேவையா ” என்று பார்க்கின்றேன் என்றார் .

“விசாரணை என்பது , சிக்கலானது . எனக்குப்பிரச்சினை இல்லை , எழுதிட்டுப்போடுவன் , கோட்ஸ் , கேஸ் , சாட்சி என அலையணும் “

அவரது பேனாவோ , அவரது டயரியைத்தொடவே இல்லை.

திடீரென எனது பக்கம் திரும்பி , எனது பெயர் , தொலைபேசி இலக்கம் , என்ன செய்கிறீர்கள் என்பதை எழுதினார் .

சட்டக்கல்லூரி இரண்டாம் வருட மாணவி , வலி கிழக்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்றேன் என்றேன் .

வாக்கு மூலத்தை எழுத வைக்க , அவருடன் போராடவே எமக்கு அலுத்துப்போனது . களைத்தே போனோம் .

கூட வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி ; இந்த மரணம் குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை ; ஏனென்றால் இந்த வைத்தியசாலை

” போதனா…… [ ஆ….நெடில் ] வைத்தியசாலை வைத்தியர்களையே [ ஏகாரம் – உயர்வுச்சிறப்பு ] பயிற்றுவிக்கின்ற வைத்தியசாலை ; வைத்தியத்தவறுகள் ; கவனயீனம் நடக்க சாத்தியமில்லை .என்றும்

“இவர் , பருத்தித்துறை நீதிபதியின் பிரதிநிதியாக வந்திருப்பவர் , இந்த விசாரணையில் இவர் தான் , பதில் நீதவான் ” அந்தப் பதவியில் உள்ளவரை நீங்கள் கேள்வி கேட்காமல் , சொல்வதை கேளுங்கள் . என

பாதிக்கப்பட்ட எங்களின் குரல்களையே அடக்க முனைந்துகொண்டிருந்தார் .

மரண விசாரணை அதிகாரி , பொலிஸ் அதிகாரியைப்பார்த்து , நீ்ங்கள் வாக்குமூலத்தை எழுதுங்கோவன் , என்றார் .

ஒரு பேனாவின் கிறுக்கல் , எத்தனை பவரானது , என நினைத்துக்கொள்கின்றேன் .

திடீரென மரண விசாரணை அதிகாரி , இறந்தவரை அடையாளப்படுத்த்வேண்டும் , யார் போகப்போகின்றீர்கள் என்றார் . கூட இருந்து வாக்கு மூலத்தை பகிர்ந்த , எனது சித்தியும் , விதுஷாவின் கணவனும்

” ஐயோ அந்த நிலையை மீண்டும் எப்படி பார்ப்போம் ” என்றனர் .

நான் , பொலிஸ் அதிகாரியின் பின் சென்றேன் . மரண விசாரணை அதிகாரி வரவே இல்லை. நான் அவளோடு பழகிய வரை , எந்த அதட்டல்களையோ , அதிகாரத்தொனியையோ விரும்பாத மென்மையானவள், அவளை நான்கு மாதங்களுக்கு முன்னர் , கணவனோடு பார்த்த தோற்றமும் அவள் சிரித்த முகமும் என்ன எதுவோ செய்ய

அவளது வெற்று உடல் கிடந்த அறைக்குள் செல்கின்றேன் ,

இறந்த அவளது உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது . ஆளே தெரியாத அளவிற்கு , முகம் மற்றும் வயிற்றுப்பகுதி பூராகவும் , அம்மை நோய்த்தழும்புகள் கறுத்துப்போய்க்கிடந்தது. அவள் தானா என்பதே எனக்கு சந்தேகமாகும் படி அவள் உடல் கிடந்தது .

பொலிஸ் அதிகாரி , என்னைப்பார்த்து முறைத்துக்கொண்டு, ” நீங்க செய்யுங்கோவன் என்ர வேலையை ” என்றார் , அவளது முடியின் நீளம் , அணிந்திருந்த உடை , உயரம் , நீளம் என கேட்டுக் குறித்தார் . அங்கிருந்த ஊழியர்கள் என்ன ஐயா எங்களையே கேட்கின்றீர்கள் , கொஞ்சம் கிட்ட வந்து பாருங்கவன் ” என்றார்கள் . அந்த ஊழியரையும் என்னை வெருட்டியது போல வெருட்டி விட்டு , பதிந்துகொண்ட விபரங்களுடன் வந்தமர்ந்தார் .

அதற்கு இடையில் , அவர்களது அணுகுமுறை செயல்களில் அவ்வளவு நம்பிக்கை அற்ற நான் , சரி அனுபவம் ஆவது வரட்டுமே என மனதில் நினைக்கிறேன் . பத்திரகை ரிப்போட்டரும் , எங்கள் உறவுமுறையுமான சுலக்சனும் அங்கு வந்திருக்கவே , நம்பிக்கை கொஞ்சம் கூடியது .

கொஞ்சம் , இனிமையாகவே , எத்தனை வருடம் ஐயா இந்த சேவையைச்செய்கின்றீ்ர்கள் என்று கேட்டேன் . இப்படி எத்தனை மரணங்களை , இயற்கை மரணமாக ஆக்கியிருப்பார் என்ற கேள்வியே எனக்குள் இருந்தது . அதை அறிந்திருப்பாரோ என்னவோ ,

பருத்தித்துறை , வல்வெட்டித்துறை , மந்திகையை தானே பார்ப்பதாகவும் 15 வருடமாக அந்த சேவையில் இருப்பதாகவும் , ஏன் நல்லாக் கதைக்கிறனோ என்றும் பெருமையாக வேறு கதையளந்தார் .

” இன்று விநாயகர் கதை தானே , நான் தான் கோவிலுக்குச்சென்று புராணம் பாடி ஆரம்பிக்க வேண்டும் என்பதால் இறந்த உடலை இன்று பார்க்க முடியாதென்று சொன்னார் .

” ஏன் உங்களுக்கு பதிலாட்கள் , இல்லையா ? நீங்கள் தானே மக்கள் சார்பானவர் , உங்களைத்தானே ஐயா , நாங்கள் நம்புகின்றோம் , உங்கள் கடமை உடலைப்பரிசோதிப்பது தானே என்றேன் .

மரண விசாரணை அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு வர , கதிரையை விட்டு எழுந்து இன்னும் இரண்டு கேஸ் எனச்சொல்லிக்கொண்டு , தொலைபேசி இலக்கத்தைத் தந்து விட்டு போகின்றார் .

யார் வாங்கி வந்தோ தெரியாது , பொலிஸ் அதிகாரிக்கு , தண்ணீர்ப்போத்தலும் , சோடாவும் வைக்கப்பட்டிருந்தது .அதையும் பார்த்துக்கொள்கின்றேன் .

சட்ட வைத்திய அதிகாரியின் அறைக்குள் அழைக்கப்படுகின்றோம். விபரத்தைக்கேட்டவரிடம் , வைத்தியசாலையின் அணுகுமுறை , விரட்டல் , அந்த ஐந்து மணிக்கு , தொற்றுநோய் பரவிடும் என்று , அனுப்பாவிட்டால் இந்த மரணம் நேர்ந்திருக்காது “என கணவன் அழுதழுது சொன்னார் .

“என்னை போதனாவைத்தியசாலைக்கு திரும்ப கூட்டிப்போக வேண்டாம் ” என்று விதுஷா சொல்லாமல் விட்டிருந்தால் , வைத்தியசாலையில் அந்த அன்று விடுவிக்காமல் வைத்தியம் செய்திருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம் , என்ர பிள்ளையைக்காப்பாற்றியிருக்கலாம் , இந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் அம்மா இல்லாமல் எப்படி வளர்த்தெடுக்கப்போகின்றோம் என , விதுஷாவின் அம்மா அழுதுகொண்டிருந்தார் .

வைத்தியசாலை பணிப்பாளருக்கு , கடிதம் மூலம் உங்கள் கோரிக்கையை முன்வையுங்கள் .

மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனச்சோதிக்கலாம் .அது தான் எனது கடமை என்றார் .

சட்ட வைத்திய அதிகாரியினது அணுகுமுறை , வேண்டுமென்றால் மக்களை, ஆசுவாசப்படுத்தலாம் , நிறுவனத்தைப்பாதுகாக்கத்தானே அவர்கள் விரும்பிக்கொள்வார்கள் , என்ற அறிவும் அனுபவமும் இருந்தாலும் , யாரிடம் இதனை முறையிடுவது , “சரி அறிக்கையைப்பார்ப்போம்” எனக் காத்திருக்கின்றோம் .

அதன் பிறகு தான் என்ன நினைத்தாரோ தெரியாது, வாக்கு மூலங்களைப்பொலிஸ் அதிகாரி எழுதிக்கொண்டிருக்கின்றார் .

எனது வாக்குமூலம் எடுக்கும் போது ” ஏன் என்னை இரண்டாவது முறையாக வாக்குமூலம் கேட்கின்றீர்கள் , என்ற போது , சுலக்சன் , இது நீதிமன்றத்திற்கு அனுப்ப எனச்சொல்லிக்கொண்டார் .

ஓரிரு மணித்தியாலம் இருக்கும் , சட்ட வைத்திய அதிகாரி , பொலிஸ் அதிகாரியை அழைக்க , நாங்களும் சென்றோம் ,

” எங்களுக்கு சந்தேகம் எதுவும் இல்லை ; சோதனைக்காக சில சாம்பிள்கள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றது . இரண்டு கிழமையின் பின்னர் அறிக்கை வரும் ” என்றார்

. கூட நின்ற உறவினர் , அப்போது உடல் மீளச் சோதனை செய்யவேண்டி வருமா எனக்கேட்ட போது , தலையைக் கவிழ்ந்த வாறே நிமிர்ந்தே பார்க்க முடியாத சட்ட வைத்திய அதிகாரி , ” தேவையான எல்லா சாம்பிள்களும் எடுத்துவிட்டோம் , சைவமா ? கிறிஸ்தவமா ? உங்கள் முறைக்கேற்ப எதுவானாலும் செய்துகொள்ளுங்கள் , இரண்டு கிழமைக்குப்பின்னர் அறிக்கை தருவோம் ” என்றார் .

பத்திரிகை நிரூபர் என்பதால் , சுலக்சன் எத்தனையோ, இந்த மாதிரியான சம்பவங்களைப்பார்த்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் , ” இப்போதய அறிக்கையைத் தரமாட்டார்களா “என்று கேட்கிறேன் .

கொழும்பிற்கு அனுப்பியிருக்கின்றார்கள் , இறந்த உடலை நாங்கள் , தாமதிக்காமல் நாங்கள் கொண்டுசெல்லவேண்டும் , என்று சொல்லி எங்களை அனுப்பிவைக்க , வாகனம் இல்லாத பொலிஸ் அதிகாரியும் எங்களுடன் ஓட்டோவில் வந்ததுடன் , வீட்டுக்கு வந்து , வீட்டை பக்கத்து வீடுகளை படம் வரைந்து கொண்டு சென்றார் .

மக்களது வரிப்பணத்திலே சம்பளம் பெறுகின்ற ஒரு சில ஊழியர்களின் தவறுகளால் , செய்ய வேண்டிய கடமைகளைச்செய்யத் தவறுவதால் , எத்தனை பேருக்கு , தத்தமது பொறுப்புக்களைத்தட்டிக்கழித்து சமாளிக்க வேண்டிய சங்கடம் ஏற்படுகின்றது .

பிரதேசங்கள் தோறும் பிரதேச வைத்தியசாலைகளை நிறுவி , முறையான வளங்களையும் , முறையான கண்காணிப்புக்களையும் செய்துவந்தால் இத்தகைய அநியாயமான ஆட்கொலைகளைத்தடுத்து நிறுத்த வாய்ப்பிருக்கின்றதா ? இல்லையா ?

அம்மை நோய் ஏற்பட்டதா இல்லையா , எப்படி ஏற்பட்டது என்பதா பிரச்சினை , தாய் சேயை பராமரிப்பு தொடர்பில் உதாசீனமாகச்செயற்பட்டு , டொக்டர் சிறிதரன் அவர்களின் 20 ஆம் அலகில் அந்நேரம் இருந்தவரும் , பராமரித்தவருமான அந்த வைத்தியர் எங்ஙனம் தன்னிச்சையாக அந்தப்பச்சிளம்குழந்தைகளின் தாயை, அதுவும் மாலை ஐந்து மணிக்கு விடுதியிலிருந்து [ WARD ] விரட்டாத குறையாகக் கலைக்க வேண்டும் ???

தம்மால் பராமரிக்க முடியாதென ,உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் , அந்த வைத்தியருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது ????

தனியார் வைத்தியசாலையில் , பார்த்துப்பார்த்து பணம் கறந்து, சிகிச்சை செய்த வைத்தியர் சிறிதரன் , இலவச வைத்தியசாலைக்கு அனுப்பியதும் தன் கடமை முடிந்தது என விலகிநிற்பது சரியானது தானா ????

அந்த சிசுக்களின் ஆரோக்கியம் குறித்து கரிசனை எடுக்கப்போவது யார் ???

இத்தகைய மர்மமான முறைகளில் வெளிவராது , மரண சான்றிதழ்களும் பொய்த்துப்போய்க்கிடக்கும் எத்தனை மருத்துவக்கொலைகள் கிடப்பில் கிடக்கின்றனவோ ????

மக்கள் ஒவ்வொருவரும் , குரல் எழுப்பாது மௌனமாகிப்போய் ,பயம் பயம் என விலகி நின்றால் , பேச வேண்டிய தருணங்களில் பேசுவது யார் ????

அரச வைத்தியசாலைகள் , அரச நிறுவனங்கள் , மக்களுக்காகவே அன்றி , அதில் அதிகாரம் செய்யும் அதிகாரிகளுக்கானதல்ல ,

இந்த நிலைமை நாளையும் , யாரோ ஒரு அப்பாவிப்பொதுமகனையே தாக்கப்போகின்றது என்பதை உணர்ந்துகொள்ள முன்வாருங்கள்

” யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு _ அருந்ததிராய் ‘

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.