வியாழன், 7 டிசம்பர், 2023

யாழ் – கொழும்பு செல்லும் பயணிகளுடன் விளையாடும் பேய், பிசாசுகள்…. அதிர்ச்சித் தகவல்கள்

 


சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….. உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…

அப்போது வவுனியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வெள்ளி இரவும் படிப்பிற்காகக் கொழும்பு போக வேண்டும். ஞாயிறு இரவு திரும்பி வருவேன். திங்கள் வேலை. இதுதான் ஒவ்வொரு வாரமும் என்னுடைய ஸ்கெடியூல்.

கொழும்பில் போய் இறங்கும் நேரம் தொடர்பில் சிக்கல் இருப்பதால் புகையிரதத்தைவிட பேருந்திலேயே அதிகம் போய் வந்துகொண்டிருந்தேன். அப்போது வவுனியாவிலிருந்து கொழும்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருந்தது. ஏறி உட்கார்ந்தால் காற்றைப் பிரித்துக்கொண்டு போவார்கள். ஏறியதும் தூங்கிவிட வேண்டும். இல்லையென்றால் உங்கள் இதயமும் வயிறும் வெளியில் வந்துவிடும்.

இந்தக் வடக்கு-கொழும்பு பேருந்துகள் பயண வழியில் சாப்பாட்டிற்காக ஒரு இடத்தில் நிறுத்துவார்கள். நல்ல வியாபாரத்தைக் கொண்டுவந்து கொடுப்பதால் இந்தப் பேருந்து சாரதிக்கும் நடத்துனருக்கும் இலவசமாக அந்தக் கடை சாப்பாடு போடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியே ஒரு தனி அறையிலிருந்து சாப்பிடுவார்கள். அறை பொதுவாக மறைக்கப்பட்டிருக்கும். விதம் விதமாக ஐட்டங்கள் வரும். கதை உண்மைதான்.

இந்த இரவுச் சாரதிகள் பற்றி ஏராளமான கதைகள் உலாவியதால் அன்று நானும் நண்பனும் கொஞ்சம் உசாராக இருந்தோம்.

சாப்பாட்டிற்கு நிறுத்திய போது அவர்களுடைய அறையைக் கடுமையாக நோட்டம் விட்டோம். நன்றாகச் சாப்பிட்டார்கள். வாசலில் துணி மறைப்பு இருந்ததால் அத்தனையும் தெளிவாகத் தெரியவில்லை. கடைசியில் அவர்கள் வேலையை முடித்து வெளியே வரும்போது நண்பன் ‘மேசைக்குக் கீழ பாரு’ என்றான். பார்த்தேன். மேசைக்குக் கீழே அதிவிசேசம் ஒன்று பாதியாக இருந்தது.

எங்களுக்குப் பக்கென்றிருந்தது. வழமையான பயணிகள் என்பதால் அந்த நடத்துனரை நண்பனுக்குப் பழக்கம். வெளியில் வந்ததும் அவரிடம் மெதுவாக இதைக் கேட்டான் நண்பன். நடத்துனர் தான் மட்டுமே இரண்டு பெக்’கள் எடுத்ததாகவும் சாரதி மது அருந்தவில்லை என்றும் சொன்னார். படு அபத்தமாக இருந்தது.

பேருந்து புறப்பட்டது. இதிலிருந்து இறங்கி வேறொரு பேருந்தைப் பிடித்துப் போய்விடலாமா என்றேன் நண்பனிடம். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் என்றான். நொச்சியாகம என்று நினைக்கிறேன். அதைக் கடக்கும் போது சாரதி தன் கைத்தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பெடுத்தார். அழைப்பும் கொழுவியது. நேரம் அதிகாலை இரண்டு மணியிருக்கும். அந்த நேரத்தில் ஜின்னோடு பேசுவாரோ என்னவோ. அப்போது ஆரம்பித்த அழைப்பு சுமார் அரை மணி நேரம் போனது. ஒரு கையில் ஸ்ரியரிங். ஒரு கையில் ஃபோன். அவ்வப்போது ஃபோனைக் கழுத்தில் வைத்துவிட்டு இரண்டு கைகளாலும் ஒரு வெட்டு. நமக்கு ஈரக்குலை வெளியில் வந்துவிட்டதுபோல் இருக்கும். வேகம் தொண்ணூறை விடக் குறைந்ததாக ஞாபகமில்லை.

இவன் குடித்துவிட்டுத்தான் ஓட்டுகிறான் என்கிற முடிவிற்கு நானும் நண்பனும் வந்தோம். புத்தளத்தில் இறங்கி, யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இன்னுமொரு பேருந்தில் தொற்றிக்கொண்டோம். பேயிலிருந்து இறங்கி பிசாசில் தொற்றிக்கொண்ட கதை.

பின்னர் நாங்கள் வவுனியா-கொழும்பு பயணத்திற்கான அத்தனை options களையும் முயற்சி செய்தோம். அரச பேருந்து, குளிரூட்டப்பட்ட ரோஸா பஸ், யாழிலிருந்து வரும் சொகுசு பஸ் (யாழில் இதற்கு இருக்கையை முற்பதிவு செய்ய வேண்டும்). எதுவுமே சரிவரவில்லை. இவை எதுவும் நம் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாத பயணங்களாகவே இருந்தன. இங்கு அடிப்படை பிரச்சினை, சாரதிகள்தான். முதலில் இங்கு வேகக்கட்டுப்பாட்டை மதித்து உய்யும்படி சட்ட ஒழுங்கு இல்லை. 59 Km/h இல் போகும் தனியார் கார்களை மறித்து தண்டம் விதிக்கும் பொலிஸாருக்கு 110 இல் போகும் தனியார் பேருந்து பிரச்சினையே இல்லை. காரணம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை இருக்கும் அத்தனை பொலிஸ் அதிகாரிகளுக்கும் தாராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் அந்தப் பேருந்துக்காறர்கள். அப்படி நிறுத்தனாலும் அது வெறும் கண்துடைப்புக்குத்தான். ஹலோ சொல்லிக்கொள்வார்கள். சிகரட் புகைப்பார்கள். மீண்டும் பயணப்படுவார்கள். அவ்வளவுதான். தவிர, இந்த இரவுச் சாரதிகள் எடுத்துக்கொள்ளும் ஓய்வு அடுத்த பயங்கரம். சாதாரணமாக, அவர்கள் தூங்கும் நேரத்தைக் கேட்டுப்பாருங்கள். பகலில் ஒரு நான்கு மணி நேரம் தூங்குவார்கள். அதுவும் பேருந்தில். அவ்வளவுதான். பகலில் நான்கு மணிநேரம் அல்ல, பன்னிரண்டு மணிநேரம் தூங்கினாலும் அது இராத்தூக்கத்தை ஈடு கட்டுமா என்ன?

மனிதர்களின் உயிரைவிட பணத்தின் பெறுமதி எகுறிவிட்ட ஒரு ஊரில் இந்தப் பேருந்து விபத்துகள் சாதாரணம்தான். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வீதியில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகளில் எத்தனை பேருக்கு பயணிகள் பற்றிய உண்மையான அக்கறை இருக்கிறது என்று தெரியவில்லை.

நாற்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு, 110 இல் ஓட்டிப்போய் மரத்தில் மோதிப் பிரண்டு கிடப்பதை ‘just accident!’ என்று சொல்வது முட்டாள்தனம்.

‘நேரத்துக்குப் போகணும், கனக்க பேர ஏத்தணும், மற்ற பஸ்ஸுக்கு இடம் கொடுக்க கூடாது, நிறைய காசு பாக்கணும் எண்டு அவனுகளே உயிரக் குடுத்து ஓட்டுறானுகள். இவனுகளா பின்னால இருக்கிற, யாருண்ணே தெரியாத முப்பது பேர்ட உசிரப் பத்திக் கவலப்படப் போறானுங்க!’

நண்பன் ஒருமுறை சொன்னான். வாஸ்தவம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.