புதன், 20 டிசம்பர், 2023

கொழும்பு கிருலப்பனையில் 8 சிறுமிகளை சீரழித்த போதகர் கைது!!

 


கொழும்பு கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் பயன்படுத்திய ஆபாச காட்சிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசியையும் கிருலப்பனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது விடுதியில் தங்கியிருந்த 23 வயதுடைய யுவதி ஒருவரும், 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 8 சிறுமிகளும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறுமிகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 6 சகோதரிகளும் அடங்குவதாக பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதியின் போதகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் தான் கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் தெரிவித்ததையடுத்து, அதிபர் 1929 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக கிருலப்பனை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அங்கு தங்கியிருந்த 23 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருவதும், மற்ற 8 சிறுமிகளும் பாடசாலைக்கு சென்று வருவதும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், சந்தேகநபரான போதகரால் மேலும் நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், மற்றொரு சிறுமியை அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

அதன்படி அவர்கள் அனைவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பெண் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயத்துடன் இணைந்து செயற்படும் இந்த தங்குமிடம் பதிவு செய்யாமல் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வருவதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகநபரான போதகருக்கு உதவிய வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகப் பொறுப்பதிகாரி நில்மினி உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.