யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.

ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பித்து, பின்னர் காதலனாது. காதலி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தியிருந்தார். பேஸ்புக் காதலிக்காக, காதலன் கமலநாதன் பல இலட்சம் ரூபாவை செலவிட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய தயாரான நிலையில், கள்வியங்காட்டிலுள்ள காதலனின் இல்லத்தில் யுவதியும் வந்து தங்கி நின்றார். பின்னர், காதலன் வழங்கிய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இது குறித்து காதலன் கமலநாதன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் யுவதி முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், யுவதி தற்போது அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், காதலன் கமலநாதனின் வீட்டுக்கு, அவரிடம் மன்னிப்பு கோர யுவதி நேற்று வந்தார். அவரை அழைத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் கமலநாதன். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் திருமணமானவர் என்பதும், மூன்று குழந்தைகளின் தாயார் என்பதும் தெரியவந்தது. கணவன் காலை இழந்தவர். கமலநாதன் முதல் அனுப்பிய 7 இலட்சம் ரூபா பணத்தில் காணி வாங்கி, கடன்காசு கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில், லோன் காசு கட்டியதாகவும், தாலியை ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நகை விற்பனை செய்யப்பட்ட இடங்களிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்றனர். அந்த பெண்ணின் குடும்ப நிலையை அறிந்த கமலநாதன் இரக்கப்பட்டு, வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவிசெய்ததாக அமையட்டும், இந்த பணம் எனக்கு தேவையில்லை, ஆனால் பெண்ணிடமிருந்த தனது சில ஆவணங்களை தருமாறு கேட்டார். எனினும், கமலநாதன் வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மூலம், மிகுதி பணத்தையும் பெறலாம் என பொலிசார் குறிப்பிட்டனர். எனினும், கமலநாதன் அதை மறுத்து விட்டார். இன்று மதியம் வரை, குறிப்பிட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை.