கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த  மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி “சாவக் குழு” வன்முறைக் கும்பலின் தலைவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர். கே.பிரியந்தன் (வயது-19) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்து ஐந்து மணித்தியலங்களாகியும் பொலிஸாருக்குத் தெரியாது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நண்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதுவரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்படாது இருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.

அவர் விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருள்களை மூட்டை கட்டியவாறு பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் உச்ச வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் வீதியிலேயே கிடந்துள்ளார்கள்.
பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேவேளை, விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டது.

விபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் பொலிஸார் மீட்டனர். பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.