ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமான அளவு சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரிற்கு பதிலாக ஆஜரான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிரபல பாதாள உலக தலைவரான மாகந்துர மதூஷ் மற்றும் பிரபல பாடகர் அமல் பெரேராவுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் அதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்களை விசாரித்த கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, அடுத்த விசாரணையின் போது நாலக டி சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள சாட்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திடம் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாலக டி சில்வாவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.