ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளர். 36 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜெனிவாவிற்கு செல்லவிருந்த நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகீசன் தங்கவேல் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் பயங்கரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எர்ல்ஸ் கோர்ட்டில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்குக் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் இரவு 11 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகீசன் தங்கவேல் சுதந்திரத்திற்கான பறையின் குரல் எனும், இசைக்குழுவின் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே வாகீசன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.