யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் குறித்து தகவல் வழங்கிய ஒருவரை, கஞ்சா விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினர் கைது செய்தது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பொய்க்குற்றச்சாட்டு கூறியே, தகவல் வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அதிக அக்கறை காண்பித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினரும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கஞ்சா கடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியமைக்காக, கிளிநொச்சி மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சர்ச்சை தோன்றியது.

இப்பொழுது யாழிலும் இதேவிதமான சர்ச்சை தோன்றியுள்ளது. யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் வழங்கிய ஒருவரே கைதானதாக கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மூலம், எழுத்து மூல முறைப்பாடு வழங்கினார்.

முற்பகல் அவர் முறைப்பாடு வழங்க, பிற்பகலில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரது உந்துருளியில் இருந்து திடீரென கடதாசி சுருள் ஒன்றை பொலிசார் மீட்டு, அதில் கஞ்சா இருந்ததாக கூறினார்கள் என்றும், சோதனை எதுவும் செய்யாமல் தாமே வைத்தவர்களை போல எடுத்தார்கள் என்றும் கைதானவர் தெரிவித்துள்ளார். அந்த சுருள் எப்படி தனது மோட்டார்சைக்கிளில் வந்ததென்று தனக்கு தெரியாதென்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவதில்லை, தேவையானால் வைத்திய பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என அவர் தர்க்கித்துள்ளார்.

நீண்ட இழுபறியின் பின்னர், ஓரிரு மணித்தியாலயத்தின் பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சார்பாகவே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்தார்களா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.