கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின்போது, தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் காடைத்தனமாக நடந்து கொண்டதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார்.

கிளிநொச்சியில் போராட்டத்தை குழப்பும் விதமாக நடந்து கொண்டமை தவறானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

“அந்த போராட்டத்திற்கு எங்களிற்கும் அழைப்பு தரப்பட்டது. மக்களிற்காக பங்குகொண்டோம். போராட்டத்தில் ஒருவனாகத்தான் நான் கலந்துகொண்டிருந்தேன். முன்வரிசையில் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்காத காரணத்தால், மக்களுடன் மக்களாக சென்றேன். அதனால் அங்கு நடந்த குழப்பங்களை உடனடியாக அவதானிக்க முடியவில்லை.

எங்களது கட்சி சார்ந்த இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர் ஒருவர் என மூவர் முரணாக நடந்தமை எங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பத்திரிகையாளர்களிற்கும், அவர்களிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பெரியளவில் பாதிப்பை கொண்டு வந்தது. எங்களது கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், உறுப்பினர்களின் நாகரிகத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

அது தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் கடமையும், பொறுப்பும் மக்களை வழிநடத்தும் கட்சியென்ற வகையிலும், மக்களிற்கு பொறுப்பு சொல்லும் தலைமை பாத்திரத்தை இந்த மாவட்டத்தில் வகிக்கின்ற காரணத்தால் உண்மைகளை ஏற்று, ஆராய்வு செய்து, பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்“ என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி இடம்பெற்றமையும், அதில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காடைத்தனமாக நடந்து கொண்டமை பலத்த விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.