யாழ்ப்பாணப் பிரதேசசெயலாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று யாழ் பிரதேசசெயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார். 2008ம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உதவித் திட்டப்பணிப்பாளராக நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் இறுதி யுத்தம் நடைபெற்று முடிந்த பின்னர் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகைள மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்டு ஐ.நா அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் வடக்கின் மீள்எழுச்சித் திட்டம், வடக்கின் துரித மீட்சித் திட்டம் என்பவற்றின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உதவி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாண தந்திரோபாய நகர் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதித் திட்டமிடல்பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் 2016ம் ஆண்டு நிர்வாகசேவையின் முதலாம் தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து Syracuse University இல் நிர்வாக சேவை தொடர்பான உயர் கற்கைநெறியினை ஒருவருடம் மேற் கொண்டு சிறப்பு சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.