கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25), என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவியும் முகநூல் மூலம் நண்பர்களாக பழகினார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கல்லூரி உணவு இடைவேளையின் போது அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து அந்த மாணவி அங்கு சென்றார்.
அப்போது அங்கு சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சதீஷ் (28), பக்கோதிபாளையம் தங்கராஜ் என்பவரது மகன் வசந்தகுமார் (24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் திருநாவுக்கரசு (26) ஆகியோருடன் அங்கு காரில் காத்து இருந்தார்.
பின்னர் மாணவி ஏறியதும் கார் அங்கிருந்து புறப்பட்டு தாராபுரம் ரோட்டில் சென்றது. காரின் பின்புறம் மாணவி, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் இருந்தனர். முன்இருக்கையில் சதீஷ் அமர்ந்தார். திருநாவுக்கரசு என்பவர் காரை ஓட்டினார்.
தாராபுரம் ரோட்டில் கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவி அணிந்து இருந்த சுடிதாரை விலக்கியதாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்ததுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும், ஆபாச படத்தை காட்டி 4 பேரும் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் காரில் இருந்து அந்த மாணவியை இறக்கி விட்டு விட்டு அவர்கள் காரில் தப்பிச்சென்றனர். நடுவழியில் தவித்த மாணவி அங்கிருந்தவர்களின் உதவியுடன் வீட்டுக்கு சென்றார். இருப்பினும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்து பணம் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் இருக்கும் திருநாவுக்கரசை காரில் அழைத்து வருவதற்கு மற்ற 3 பேரும் ஜோதி நகரில் தயாராக நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீது பாலியல் தொந்தரவு செய்தல், படம் எடுத்து மிரட்டுதல், நகை பறிப்பு, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர்.