வியாழன், 28 பிப்ரவரி, 2019

கணவனின் சீதன ஆசையால் உயிரை விட்ட மனைவி!! யாழில் நடந்த சம்பவம்!!

இந்த சமூகஅமைப்பு பெண்களிற்கு செய்துள்ள மிகப்பெரிய அநீதி சீதனம். திருமண
வாழ்க்கையென்பது சீதனத்தால் தீர்மானிக்கப்படுவதாகிவிட்டது. சிறிய வீதத்தினர் இதில்
விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் இந்த சமூகமே சீதனத்தால் நிறைந்தது, சீதனத்தால் ஆனது,
சீதனத்தை நம்பியே வாழ்வது.

சீதனமென்பது எந்தகாலக்கட்டத்தில் தோன்றியிருக்குமென அறுதியிட முடியவில்லை. ஆனால்
தமிழ்சமூகத்தின் மரபில் ஊறிய ஒரு சம்பிரதாயமாகுமளவிற்கு பழமையானது.

சீதனம் தொடர்பில் சில வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும், சமூகத்தில் உள்ள
பெரும்பாலானவர்கள் அதனை தவிர்க்க முடியாதவர்களாகத்தான் உள்ளனர். சீதனம் வாங்குபவர்கள்
பலவீனமாக ஆண்கள் என்பது மாதிரியான ஒரு எண்ணம் இப்பொழுது மெல்லமெல்ல தலைதூக்க
ஆரம்பித்துள்ளது. இது மிகச்சிறிய அதிர்வு. இது நிகழவே பல தசாப்தங்களாக பலர் போராட
வேண்டியிருந்தது.

சீதனம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு நியதியென்பதாகிவிட்டது. இந்த சமூகத்தில்
மிகப்பெரும்பாலானவர்கள் சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்கிறார்கள். திருமணங்களை சீதனம்தான்
தீர்மானிக்கிறது.

மனிதஉறவுகள் என்பது மகத்தானவை. நண்பர்களாகுவதென்பதே அவ்வளவு இலகுவில் நிகழ்வதில்லை.
இரண்டு நபர்களிற்கிடையிலான புரிதலே நட்பை ஆழமாக்குகிறது. நடித்த நட்பிற்கு
மனப்புரிதல் அவசியம்.

இதுவே, திருமணத்திற்கென்றால் எவ்வளவு அதிகமாக தேவைப்படும்? ஆனால் தமிழ் கல்யாணங்கள்
அப்படி நடக்கிறதா? இல்லை. திருமணங்களை சீதனம்தான் தீர்மானிக்கிறது என்றானபின் மனம்,
உணர்ச்சிகள் பற்றி யார் அலட்டிக்கொள்கிறார்கள்.

திருமணமும் சந்தை வியாபாரம் ஆகிவிட்டது. அதிகம் படித்தவர்கள், நல்ல
உத்தியோகத்திலிருப்பவர்கள் திருமணச்சந்தையில் கிராக்கி அதிகம் உள்ள விற்பனைப்பொருள்கள்.
இந்தவகையானவர்களை விலைபேசி பிடிக்க வங்கிக்கணக்கு புத்தகங்களுடன் பெண்களை பெற்றவர்கள்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இது என்னவிதமான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாருமே உணர்ந்து கொள்வதில்லை.
திருமணச்சந்தையில் அனைத்தையும் நிர்ணயிப்பது பணம். எவ்வளவு அதிகம் பணம் கறக்கலாமென்பதில்
மாப்பிள்ளை தரப்பு குறியாக இருக்கும். எவ்வளவு பணத்தை மிச்சம்பிடிப்பதென்பதில்
பெண்வீட்டுதரப்பு கவனமாக இருக்கும். இதில் வாழப்போகிறவர்களின் கருத்தையும்,
விருப்பத்தையும் யார் கவனத்தில் எடுக்கிறார்கள்.

திருமணம் செய்யும்போதே தமது பிள்ளைகளின் காலம் பற்றிய தயக்கம் ஏற்படும் காலமிது.
மூத்தது பெண்பிள்ளையெனில் எப்படி குடும்பத்தை திட்டமிடுவதென்பதை திருமணமான
புதிதிலேயே பேசிக்கொள்கிறார்கள்.

திருமணம் ஒரு சமூக அநீதியென்பதில் இரண்டாவது கருத்திருக்க முடியாது. ஏனெனில்
சீதனத்தால் குடும்ப வாழ்க்கை சீரழிந்த எத்தனையோ பெண்கள் உள்ளனர். சீதனத்தால் வெளிப்படையாக
பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதெனில், ஏராளம் ஆண்கள் மனதுக்குள்ளாக எதிர்பார்ப்புக்களை
புதைத்துக்கொள்ளும் துயரமும் நிகழ்கிறது. குடும்பம், சகோதரிகளிற்காக நல்ல சீதனத்துடன்
வரும் திருமணங்களிற்காக தலையாட்டி, விலையாகும் ஆண்களை பற்றி தமிழ்ச்சூழலில் அதிகமாக
பேசப்பட்டுள்ளதா? தமிழர்கள் மத்தியில் உள்ள விவகாரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சீதனம்
கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

நமது குடும்பங்களில் ஆண்கள்தான் பெறுமதியான விற்பனை சரக்கு. நல்ல கல்வி, சமூக அந்தஸ்து,
வேலையென்பவற்றின்மூலம் அவர்களின் “விலை“யை உயர்த்த ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள்.
அவர்களிற்கு வாங்கும் சீதனத்தின் மூலமே அவரின்  சகோதரிகளின் திருமணத்தை நடத்தி
முடித்துவிடலாமென கணக்கு பண்ணும் பெற்றோர்கள்தானே ஒவ்வொருவரும்.

அந்த கலாசாரம் மோசமான கட்டமொன்றை இன்றைய காலத்தில் எட்டியுள்ளது. கல்வி கற்றவர்களும்
சீதனம் ஒரு சமூககறையென்பதை உணர்வதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இணைத்த இந்த
சமூகத்தில் சீதனம் தொடர்பான மீள்மதிப்பீடு அவசியம். சீதனத்தை விடுதலைப்புலிகள்
தடைசெய்திருந்தனர். எனினும், அது கொடுக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

சீதனம் இல்லாததால் திருமணம் செய்யாமலிருப்பவர்கள், காதலித்த பின் சீதனத்திற்காக இன்னொருவரை
திருமணம் செய்பவர்கள், சீதனக்கொடுமைகள் செய்பவர்கள் நமது சமூகத்தில் நிறைந்துள்ளனர்.
பெண்பிள்ளைகளை பெற்றவர்களை சீதனம் ஒரு கொடிய விலங்காக துரத்திக் கொண்டேயிருக்கும்.
ஏழைகளை இரக்கமில்லாமல் வேட்டையாடும் சீதனக்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களிற்கு உதாரணம்
சிவபாக்கியம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த சிவபாக்கியம் பெண்பிள்ளையை பெற்று சீதனக்கொடுமையின்
ஒருவகையான விளைவை எதிர்கொள்கிறார்.

சிவபாக்கியத்தின் நான்காவது மகளிற்கும் வவுனியாவை சேர்ந்த வாலிபர் ஒருவரிற்கும்
திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்தின் பின்னரான ஐந்து மாதங்கள் சிவபாக்கியத்தின்
வீட்டிலும், பின்னர் சிறிதுகாலம் கணவர் வீட்டிலும் வாழ்ந்து, பின்னர் கொடிகாமத்தில்
தனிக்குடித்தனம் சென்றனர்.

தனிக்குடித்தனம் சென்றபின்னர் அவர்களிற்கிடையில் சண்டை உருவாக காரணம் சீதனம். கொடுத்த
சீதனம் காணாதென சண்டை ஆரம்பித்தது. கடன்தொல்லைகள் அதிகரிக்க, இன்னும் சீதனம் அதிகம்
தேவையென மனைவியை நச்சரிக்க ஆரம்பித்துள்ளான். மனைவியின் நகைகளை அடைவு வைத்தும்,
வங்கிக்கடனான மனைவியின் பெயரில் 120,000 ரூபாவும் மேலும் கைமாற்றாக 100,000
ரூபாவும் வாங்கியுமுள்ளார். இன்னும் அதிக பணம் தேவையென நச்சரித்து, இறுதியில் அடிஉதை
ஆரம்பித்தது. அப்பொழுது சிவபாக்கியத்தின் மகள் 3 மாத கர்ப்பிணி.

கணவனின் அடிஉதையால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இரத்தப்போக்கு அதிகமாகியது. 2015
மார்ச் மாதத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். பொலிஸ்
நிலையத்திற்கும் சென்று முறையிட்டார்.

வைத்திய சிகிச்சைகளை முடித்த பின்னர் தனது தாயாருடன் சென்று தங்கியுள்ளார். இந்த
சமயத்தில் துன்புறுத்தலில் ஈடுபட்ட கணவன் கைது செய்யப்பட்டான். இந்த சமயத்தில்
சிவபாக்கியத்தின் மகளை, தடுத்து வைக்கப்பட்ட கணவனின் உறவினர்கள் மிரட்டியதாக
கூறப்படுகிறது. கணவனை பிரிந்த பெண்ணிற்கு இந்த சமூகம் வழங்குவது எதனை? வசைகளையும்,
அவதூறுகளையும் ஊகங்களாக வெளியிட்டு திண்ணைப்பேச்சில் திருப்திப்பட்டுக் கொள்ளும். அதுதான்
அங்கும் நடந்தது.

இவையெதையும் எதிர்கொள்ளும் திராணி சுமதிக்கு இருக்கவில்லை. விபரீத முடிவெடுத்தார்.
ஒருநாள் எல்லோரும் தூங்கிய பின்னர் தனது அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். இறப்பதற்கு முன்னர் தனது கைப்பட தற்கொலைக்கான காரணத்தை எழுதிவைத்துள்ளார்.

இதன்பின்னான நாட்களில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் தற்கொலை செய்த பெண்ணின்
கணவன் கண்ணாடித்துண்டால் தனது கழுத்தில் காயத்தை ஏற்படுத்திய சம்பவமும் நடந்தது.

தற்கொலை செய்த பெண்ணின் பெயரில் வங்கியில் பெறப்பட்ட கடனின் சுமையை அவரது தாயார்தான்
எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. சீதனமாக வழங்கப்பட்ட நகைகள் அடைவு வைக்கப்பட்டு விட்டன.
இந்த சுமைகள் எல்லாவற்றையும் அந்த ஏழைத்தாய்தான் சுமக்கிறார்.

அந்த ஏழைத்தாய் செய்த குற்றமென்ன… ஏழையாய் வாழ்ந்ததா? பெண்பிள்ளையை பெற்றதா?

------------------------------------------------------------------------

*சீதன சந்தை நிலவரம்*

வைத்தியர்       80 இலட்சம்- 1 கோடி + வீடு + நகை

பொறியியலாளர்      60 – 90 இலட்சம் + வீடு + நகை

சட்டத்தரணி    40 – 70 இலட்சம் + வீடு + நகை

ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள்  20 – 40 இலட்சம் + வீடு + நகை

தனியார்துறை  15 – 30 இலட்சம் + வீடு + நகை

விவசாயி, சுயதொழிலாளி  8 – 15 இலட்சம் + நகை + வீடு (சில சமயம்)

சும்மாயிருப்பவர்   8 இலட்சம்வரை + நகை + வீடு (சில சமயம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.